Monday, February 1, 2010

தமிழக வரலாற்றில் துரோகிகள்

தமிழர் வரலாற்றில் காட்டிக்கொடுக்கும் துரோகிகளின் வரலாறும் பதியப்பட்டே காலம் காலமாக வந்துகொண்டிருக்கிறது. அவற்றில் சீறும் சிறுத்தைகள் என்றுக்கூறிக்கொள்ளும் தொல்.திருமாவளவன் என்பவரும் கி.பி.2009 ஆம் ஆண்டின் துரோகிகள் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். ஏனென்றால் ஈழத்தமிழர்களை காக்க தமிழ்நாட்டு உறவுகளிடம் எழுந்த எழுச்சியை ஒடுக்கியவர்களில் முதன்மையானவர் தொல்.திருமாவளவன் என்பவரே.


ஈழத்தமிழர்களைக்காக்க சென்னையில் மாநாடு, தஞ்சையில் மாநாடு, அங்கே மாநாடு இங்கே மாநாடு எழும் தமிழீழம் மாநாடு என்று கூறிக்கொண்டு பின்னால் ஈழம் எழாத வகையில் உட்குத்து செய்த பெருமை தொல்.திருமாவளவன் அவர்களையே சாரும். இவர் செய்ததில் மிகக்கொடுமையான காரியம் எதுவென்றால் கூட்டணிக்கட்சித்தலைவர் மு.கருணாநிதிக்கு நன்றிக்கடனாக தோழர் முத்துக்குமரன் அவர்களால் தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சியை அடக்கி ஒடுக்கியதே.

கடந்த சனவரி 29 வியாழன் அன்று முத்துக்குமரன் தீக்கு தன்னை இரையாக்கி தமிழக மாணவர்களிடம் எழுச்சியை உண்டாக்கிய தொடக்கத்திலிருந்து தொல்.திருமாவளவனின் சகுனித்தனம் அதிகமாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. இம்மாணவர் எழுச்சியை வளரவிட்டால் ஆளும் கட்சியான திமுக அரசு கலைக்கப்படும். இதனால் தனக்கு நட்டம் என்று தொல்.திருமாவளவனின் மூளை வேலை செய்துவிட்டது. ஏனென்றால மாணவர்கள் எழுச்சி என்பது எப்படிப்பட்டது என்பது அனைத்து மக்களும் அறிந்ததே.

முத்துக்குமரனின் கோரிக்கையான “எனது உடலை துருப்புச்சீட்டாக வைத்து போராடுங்கள்” என்று சொன்னதற்கிணங்க மாணவர்கள் அவரின் உடலை மருத்துவமனைக்கு அருகிலேயே பெரிய மைதானம் எதிலாவது அனைத்து மக்களும் பார்வையிடும் வகையில் வைக்க வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் திமுக வின் கூட்டணி கட்சியினரும் ஆளும் அரசின் காவல்படையுன் இணைந்து முத்துக்குமரனின் வீடு உள்ள கொளத்தூருக்குதான் கொண்டு செல்ல வேண்டும் என்று மாணவர்களை மிரட்டி கொண்டு சென்றனர்.

சென்னையிலிருந்து முத்துக்குமரனின் சொந்த ஊரான தூத்துக்குடி கொழுவைநல்லூருக்கு உடலை கொண்டு சென்று தமிழகம் முழுக்க எழுச்சியை ஏற்படுத்தலாம் என்று மாணவர்கள் முடிவு செய்தனர். ஆனால் “உடல் அழுகிவிடும்” என்றுக்கூறி ஐஸ் பாக்ஸ் இருக்கும் இக்காலத்தில் திமுக அரசின் கூட்டணியிலுள்ள தலைவர் தடுத்துவிட்டார்.

சரி அடக்கத்தினையாவது தமிழகம் முழுவதும் இருந்து மாணவர்கள் வரும் வகையில் அடக்கத்தினை ஞாயிறு(பெப் 1) அன்று வைக்கலாம் என்று மாணவர்கள் கூறினார்கள். ஆனால் திமுக அடிவருடி கட்சிகளின் முயற்சியால் சனிக்கிழமை( சனவரி 31) அன்று வைக்க வேண்டும் என்று முடிவாகிவிட்டது.

சனவரி 31 அன்று கொளத்தூரிலிருந்து ஈகி முத்துக்குமரனின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. போகும் வழியில் பெரம்பலூரிலிருந்து புரசைவாக்கம் வழியாக சென்றால் இன்னும் அதிகமாக மக்களிடம் எழுச்சி உண்டாகும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்துவார்கள் என்று மாணவர்கள் வற்புறுத்தி மறியல் செய்தனர். அப்பொழுது வாகனம் ஒன்றில் நின்றுகொண்டு வந்த தொல்.திருமாவளவனின் வழிகாட்டலில் திருமாவளவனின் உடன் இருக்கும் வன்னியரசு என்பவர் சில ஆட்களுடன் ஓடி வந்து மாணவர்களிடம் புரசைவாக்கம் வழி செல்ல இயலாது என்று கூறினார். மாணவர்களும் தங்கள் எண்ணத்தில் உறுதியாக இருந்தனர். இதனால் வெகுண்ட திருமாவளவனின் கையாட்கள் அண்ணன் திருமாவின் பேச்சை கேட்க மாட்டீர்களா என்று முதன்முறையாக இரு மாணவர்களை அடித்து மிரட்டினர். அப்பொழுதுதான் திமுக அரசின் கையாளாக மாணவர் எழுச்சியை ஒடுக்க காக்கிச்சட்டை போடாத அரசின் கையாளாக திருமாவளவன் வந்துள்ளார் என்பது மாணவர்களுக்கு தெரியவந்தது.

அந்த மாணவர்களுக்கு அமைப்போ, தலைமையோ ஏதும் கிடையாது. இதனால் தங்களால் இவர்களை எதிர்க்க இயலாது என்று பின்வாங்கிவிட்டனர். பின்னர் திமுக அரசின் எண்ணம் போல் திருமாவளவன் வழிநடத்திச்சென்றார். பின்னர் மயானத்தினை நெருங்கும் வேளையில் இரவு 9.30 மணியளவில் திமுக அரசு முத்துக்குமரனின் தியாகத்தினால் ஏற்பட்ட ஈழ ஆதரவு எழுச்சியை கண்டு பயந்து அதை ஒடுக்க அடுத்த திட்டமாக இரவோடு இரவாக கல்லூரிகளை காலவரையற்று மூட உத்தரவிட்டது.

திமுக அரசின் இவ் அறிக்கையினால் வெகுண்டெழுந்த மாணவர்கள் ஈகி முத்துக்குமரன் கூறியபடி “எமது உடலை துருப்புச்சீட்டாக வைத்து போராடுங்கள்” என்பதற்கிணங்க “திமுக அரசின் உத்தரவினை திரும்பப் பெறாவிடில் முத்துக்குமரனின் சடலத்தினை எரிக்க விடமாட்டோம்” என்று சாலையின் நடுவில் வைத்து மறுபடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அனைத்து பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து துணைநின்றனர்.

அப்பொழுது மறுபடியும் திமுக அரசின் கையாளான திருமாவளவனின் கையாள் வன்னியரசு மாணவர்களிடம் வந்து “இந்த உடலை துருப்பு சீட்டாக வைத்து போராடுவது முத்துக்குமாரை அவமானப் படுத்துவதாகும் என்று கூறியுள்ளார். அபொழுதுதான் மாணவர்களுக்கு புரிந்தது முத்துக்குமரனின் கொள்கை என்ன என்பதும் அவரது நோக்கம் என்ன என்பதும் விடுதலைச்சிறுத்தைகள் என்ற கட்சியின் முக்கிய பொறுப்பாளர் வன்னியரசுவுக்கு சுத்தமாக தெரியாது என்பது. அப்பொழுது, திருமாவளவனின் கையாட்கள் இரண்டாவது முறையாக மிகவும் மோசமாக மாணவர்களை தாக்கினர். ஊர்தியின் மேல் அமர்ந்து இருந்த செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்களை காட்டுமிராண்டித்தனமாக அடித்து கீழே தள்ளிவிட்டு ஊர்தியை கைப்பற்றி சுடுகாட்டுக்கு எடுத்து சென்றனர். அப்பொழுது வன்னியரசு மாணவர்களை திருமா அண்ணாவின் சொல்லை கேட்காத உங்களை கொல்லாமல் விடமாட்டேன் என்று கூறி உடலை எரித்துவிட்டு வந்து உங்களை கவனித்துக்கொள்கிறேன் என்று மிரட்டிவிட்டுச்சென்றார். இவைகள் எல்லாம் தொல்.திருமாவளவனின் பார்வையில்தான் நடைபெற்றது.

உண்மையான உணர்வோடு முத்துக்குமரன் தீக்குளித்ததிலிருந்து இறுதி வரை வந்த அம்மாணவர்கள் இவர்களின் செயல்பாடுகளால் தங்களின் உயிரை கையில் பிடித்துக்கொண்டு தங்கள் இரு சக்கர வண்டிகளை நிறுத்தி வைத்திருந்த கொளத்தூருக்கு வேக வேகமாக ஓடிவந்தோம்.

இதைப்பற்றிய செய்தியினை தமிழ் ஊடகங்கள் வெளியிடவில்லை. ஆனால் இந்திய எக்ஸ்பிரஸ் என்ற ஆங்கில நாளிதழ் மட்டும் வெளியிட்டிருந்தது. செய்தியினை முழுவதும் போடாமல் சிறிதளவு வெளியிட்டிருந்தது. அப்படி முழுவதும் போட்டிருந்தால் அப்பத்திரிக்கை அலுவலகத்தினை குண்டர்கள் எரித்திருப்பார்கள்.

அப்பத்திரிக்கை செய்தியும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
அப்பொழுது மட்டும் திருமாவளவன் என்ற நபரும், விடுதலைச்சிறுத்தைகள் என்ற கட்சியும் இல்லாமலிருந்தால் கண்டிப்பாக தமிழகத்தில் மாணவர் பேரெழுச்சி 1983 காலகட்டத்தில் ஏற்பட்டதைப்போல் உண்டாகியிருக்கும் திமுக அரசு கலைந்திருக்கும் அல்லது தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்களுக்கு கட்டுப்பட்டிருக்கும். ஈழமக்களின் எதிர்ப்பார்ப்பும் நிறைவேறி இருக்கும்.


ஈழமக்களைப்பற்றி வாயில் மட்டும் பேசி வரும் இப்படிப்பட்ட பச்சைத் துரோகி தொல்.திருமாவளவனை தமிழக மக்களும், தமிழீழ மக்களும் புரிந்துகொள்ள வேண்டும்..


இராவணன்

நன்றி மீனகம்

Friday, January 29, 2010

தமிழின் தொன்மையும் மறைக்கும் சூழ்ச்சியும்

''இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே பரவியிருந்தது. அசோக மாமன்னன் தமிழ் மொழியிடம் கடன் பெற்றுத்தான் அவனது கல் வெட்டுக்களைப் பொறித்திருக்கிறான். தமிழனின் தொன்மையான வரலாற்றை மறைக்க சதி நடக்கிறது’’ என்று கூறி அதிர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார்,ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி ஒருவர்.

நடன காசிநாதன்தான் அந்த அதிகாரி. நெல்லை பாளையங்கோட்டையில், மத்திய செம்மொழி தமிழாய்வு மையமும், சென்னையிலுள்ள பெரியார் ஈ.வெ.ராமசாமி-நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய ‘தமிழ்நாட்டுத் தொல்லியல் ஆய்வுகள் மற்றும் ஆதிச்சநல்லூர் சிறப்பும், எதிர்காலத்திட்டங்களும்’ என்கிற தலைப்பிலான தேசிய கருத்தரங்கில்தான் இப்படிப் பேசி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் அவர். நடன காசிநாதனை நாம் சந்தித்துப் பேசினோம்.

‘‘1989-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை தமிழ்நாடு தொல்லியல்துறை இயக்குநராக நான் பணியாற்றிய போதுதான் தமிழ்நாட்டில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடந்தன’’ என்று ஆரம்பித்தார் அவர்.

‘‘குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை ஆறு கடலோடு கலக்கும் அழகன்குளம், ஈரோடு மாவட்டம் கொடுமணல், நாகை மாவட்டம் பூம்புகார் ஆகிய இடங்களில் நிலம் மற்றும் கடல் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப் பட்டன. அழகன்குளத்தில் கொத்துக் கொத்தாய் ரோமானிய காசுகள், இடுப்பில் குழந்தையுடன் கூடிய மரத்தால் ஆனதாய் சிற்பம், கண்ணாடி கைப்பிடியை வைத்திருக்கும் மூன்று தாய்மார்களின் சிற்பம் போன்றவையும் கண்டுபிடிக்கப்பட்டன. கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த அந்தப் பொருட்கள் மூலம் பழங்காலத் தமிழன் உரோமானியர் களுடன் வணிகம் புரிந்திருக்கிறான் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.

கொடுமணலில்சாம்பிராணிப் புகை போடப் பயன்படும் செம்புப் பாத்திரம், இரும்பு ஈட்டிகள், தவிர ராஜஸ்தானிலிருந்து தருவிக்கப்பட்ட கார்னிலியன் கல்மணிகள் கண் டெடுக்கப்பட்டன. மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் சங்ககால படகுத்துறை, நீர்த்தேக்கம், புத்தவிகார் போன்றவை கிடைத்தன. தமிழக தொல்லியல்துறை சார்பில் நாங்கள் செய்த அகழ்வாராய்ச்சியில், கிழார்வெளி என்கிற இடத்தில் 2400 ஆண்டுகளுக்கு முந்தைய இன்னொரு படகுத்துறை, படகுகளைக் கட்டும் இலுப்பை மரம், எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகளைக் கண்டுபிடித்தோம்.

அதேபோல் கோவா கடல் ஆய்வு நிறுவனத்துடன் சேர்ந்து நாங்கள் நடத்திய ஆய்விலிருந்து, கடல் தற்போது 5 கி.மீ. தூரம் முன்னேறி ஊருக்குள் வந்திருப்பதைக் கண் டறிந்தோம். தவிர, ‘சைட் ஸ்கேன் சோனார்’ என்கிற நவீன தொழில்நுட்ப முறையின் மூலம் கடலுக்குள் 21 அடி ஆழத்தில் 5 கட்டடங்கள் இருப்பதையும் கண்டுபிடி த்தோம். அவை செம்புரான் கல்லினால் கட்டப்பட்ட கோயில்கள் அல்லது புத்தவிகார்களாக
இருக்கலாம்.

                            


அதுபோல பூம்புகார் அருகே வானகிரி பகுதியில் கடலுக்குள், 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு டேனிஷ் கப்பல் மூழ்கிக் கிடப்பதைக் கண்டுபிடித்தோம். அது டென்மார்க் அல்லது இங்கிலாந்திலிருந்து வந்த கப்பலாக இருக்கலாம். அதிலிருந்த ஈயக்கட்டிகள் சிலவற்றை எடுத்து கடல் அகழ் வைப்பகத்தில் வைத்தோம். நான் பதவியிலிருந்த காலத்தில்தான் இவை அனைத்தும் நடந்தன’’ என்றவர், அடுத்ததாக சப்ஜெக்டுக்கு வந்தார்.

‘‘தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணிக் கரையிலுள்ள ஆதிச்சநல்லூரை ‘தமிழகத்தின் ஹரப்பா’ என்றே சொல்லலாம். அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல்களம் அது. கடந்த 2004-2005-ம் ஆண்டில் மத்திய தொல்லியல் அகழாய்வு இயக்குநர் எஸ்.டி.சத்தியமூர்த்தி தலைமையில் அங்கே நீண்டநாட்களாக நடந்த அகழாய்வுகளில் 150 -க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அதில் ஒரு தாழி, 3000 ஆண்டுகள் பழைமையானது. அதியற்புதமான அந்தத் தாழியில் ‘அப்ளிக்யூ’ முறையில் ஒரு பெண், மான், வாழை மரம், ஆற்றில் இரண்டு முதலைகள் இருப்பது மாதிரியான உருவங்கள் வரையப்பட்டிருந்தன.


அந்தப்பானைகளின் ஓட்டில் இருந்த சில குறியீடுகள் ஹரப்பா கால உருவ எழுத்தை ஒத்திருந்தன. அது மூவாயிரம் முதல் ஐயாயிரம் ஆண்டுகள் பழைமையானது. தவிர, அங்கு கிடைத்த செம்புப் பொருட்கள் குஜராத் டைமமாபாத்தில் கிடைத்தது போன்ற ஹரப்பா காலப் பொருட்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எல்லாவற்றுக்கும்மேலாக ஒரு தாழியின் உட் பகுதியில் பழந்தமிழ் எழுத்துக்கள் இருந்தன. அதைப் பார்த்த சத்தியமூர்த்தி உடனடியாக கல்வெட்டுத்துறை இயக்குநர் எம்.டி.சம்பத்தை அழைத்து வந்து, அந்தக் கல்வெட்டை வாசிக்கச் சொன்னார். அதில் ‘கரி அரவ நாதன்’ என்று எழுதப்பட்டிருந்ததாக சம்பத் சொல்லியிருக்கிறார் ‘கதிரவன் மகன் ஆதன்’ என்று அதற்குப் பொருள். ஆதனைப் புதைத்த தாழிதான் அது. கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் போன்றோரும் அந்தத் தாழியை அபூர்வமானது, அந்தப் பழந்தமிழ் எழுத்துக்கள் ஹரப்பா கால உருவ எழுத்துக்களைப் போல இருப்பதாக கருத்துச் சொன்னார்கள். அந்தத் தகவல்கள் கடந்த 01.07.05-ம் தேதி பிரண்ட்லைன் ஆங்கில இதழில் வெளிவந்தன.

ஆனால் அதன்பிறகு அவர்களுக்கு என்ன நெருக்கடி வந்ததோ? தற்போது தாழியில் கல்வெட்டே இல்லை என்று சொல்கிறார்கள். ‘அது அபூர்வமான தாழி’ என்று சொன்ன ஐராவதம் மகாதேவன், இப்போது, ‘அது ஹரப்பா கால எழுத்தல்ல’ என்கிறார். தாழியைக் கண்டுபிடித்த சத்தியமூர்த்தியும், சம்பத்தும் கூட இப்போது அதுபற்றி வாய்திறக்க மறுக்கிறார்கள். அவர்கள் இருந்த பல மேடைகளில் நான் இதுபற்றிப் பேசியும் அவர்கள் பதில் சொன்னதில்லை. இதையெல்லாம் நான் எழுதிய ‘தமிழகம் அரப்பன் நாகரிக தாயகம்’’ என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறேன்.


‘வடநாட்டில் அசோகர் கால கல்வெட்டுக்கள் தான் முதன்மையானவை, பழைமையானவை, அதன் காலம் கி.மு. 2300 ஆண்டுகள்’ என்பதுதான் இதுவரை சொல்லப்பட்ட வரலாறு. ஆனால், ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியிலிருந்த பழந்தமிழ் எழுத்துக்கள் கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முந்தையவை. அதாவது அசோகர் கல்வெட்டை விட 200 ஆண்டுகள் பழைமையானவை.

அப்படியானால் தமிழ்மொழியில் இருந்து கடன்பெற்றுத்தான் அசோகர் அவரது கல்வெட்டுகளைப் பொறித்திருக்கிறார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இதுவரை வடக்கிலிருந்துதான் எழுத்துக்கள் வந்தன என்கிற வாதம் இதனால் தவிடுபொடியாகிறது. ‘தமிழன் அந்தக் காலத்திலேயே கற்றறிந்தவனாக இருந்திருக்கிறான். அவன் பயன் படுத்திய தமிழ் மொழியில்தான் இந்திய மக்கள் அனைவரும் எழுதியிருக்கிறார்கள்’ என்பதும் உறுதியாகிறது.

இந்த வரலாற்று உண்மைகள் வெளியே வந்து தமிழனுக்குப் பெருமை சேர்ந்து விடக்கூடாது என்பதாலேயே சிலர் வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார்கள். ஆய்வு முடிந்து ஆறு ஆண்டுகள் ஆன பின்னரும் ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை வெளியிடப்படாததற்கு இதுவே காரணம்’’ என்றார் நடனகாசிநாதன் ஆவேசத்துடன்.

உலகச்செம்மொழி மாநாடு நடைபெறவிருக்கும் இந்த நேரத்தில் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி அறிக்கையை வெளியிட வைத்தால் அது தமிழுக்கு அளப்பரிய பெருமை சேர்க்குமே!

என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?
- அ. துரைசாமி

நன்றி

தமிழ்வட்டம் மடற்குழுவில் திரு.தங்கவேலு

தமிழ் உலகம். திரு.மறைமலை