Monday, February 1, 2010

தமிழக வரலாற்றில் துரோகிகள்

தமிழர் வரலாற்றில் காட்டிக்கொடுக்கும் துரோகிகளின் வரலாறும் பதியப்பட்டே காலம் காலமாக வந்துகொண்டிருக்கிறது. அவற்றில் சீறும் சிறுத்தைகள் என்றுக்கூறிக்கொள்ளும் தொல்.திருமாவளவன் என்பவரும் கி.பி.2009 ஆம் ஆண்டின் துரோகிகள் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். ஏனென்றால் ஈழத்தமிழர்களை காக்க தமிழ்நாட்டு உறவுகளிடம் எழுந்த எழுச்சியை ஒடுக்கியவர்களில் முதன்மையானவர் தொல்.திருமாவளவன் என்பவரே.


ஈழத்தமிழர்களைக்காக்க சென்னையில் மாநாடு, தஞ்சையில் மாநாடு, அங்கே மாநாடு இங்கே மாநாடு எழும் தமிழீழம் மாநாடு என்று கூறிக்கொண்டு பின்னால் ஈழம் எழாத வகையில் உட்குத்து செய்த பெருமை தொல்.திருமாவளவன் அவர்களையே சாரும். இவர் செய்ததில் மிகக்கொடுமையான காரியம் எதுவென்றால் கூட்டணிக்கட்சித்தலைவர் மு.கருணாநிதிக்கு நன்றிக்கடனாக தோழர் முத்துக்குமரன் அவர்களால் தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சியை அடக்கி ஒடுக்கியதே.

கடந்த சனவரி 29 வியாழன் அன்று முத்துக்குமரன் தீக்கு தன்னை இரையாக்கி தமிழக மாணவர்களிடம் எழுச்சியை உண்டாக்கிய தொடக்கத்திலிருந்து தொல்.திருமாவளவனின் சகுனித்தனம் அதிகமாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. இம்மாணவர் எழுச்சியை வளரவிட்டால் ஆளும் கட்சியான திமுக அரசு கலைக்கப்படும். இதனால் தனக்கு நட்டம் என்று தொல்.திருமாவளவனின் மூளை வேலை செய்துவிட்டது. ஏனென்றால மாணவர்கள் எழுச்சி என்பது எப்படிப்பட்டது என்பது அனைத்து மக்களும் அறிந்ததே.

முத்துக்குமரனின் கோரிக்கையான “எனது உடலை துருப்புச்சீட்டாக வைத்து போராடுங்கள்” என்று சொன்னதற்கிணங்க மாணவர்கள் அவரின் உடலை மருத்துவமனைக்கு அருகிலேயே பெரிய மைதானம் எதிலாவது அனைத்து மக்களும் பார்வையிடும் வகையில் வைக்க வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் திமுக வின் கூட்டணி கட்சியினரும் ஆளும் அரசின் காவல்படையுன் இணைந்து முத்துக்குமரனின் வீடு உள்ள கொளத்தூருக்குதான் கொண்டு செல்ல வேண்டும் என்று மாணவர்களை மிரட்டி கொண்டு சென்றனர்.

சென்னையிலிருந்து முத்துக்குமரனின் சொந்த ஊரான தூத்துக்குடி கொழுவைநல்லூருக்கு உடலை கொண்டு சென்று தமிழகம் முழுக்க எழுச்சியை ஏற்படுத்தலாம் என்று மாணவர்கள் முடிவு செய்தனர். ஆனால் “உடல் அழுகிவிடும்” என்றுக்கூறி ஐஸ் பாக்ஸ் இருக்கும் இக்காலத்தில் திமுக அரசின் கூட்டணியிலுள்ள தலைவர் தடுத்துவிட்டார்.

சரி அடக்கத்தினையாவது தமிழகம் முழுவதும் இருந்து மாணவர்கள் வரும் வகையில் அடக்கத்தினை ஞாயிறு(பெப் 1) அன்று வைக்கலாம் என்று மாணவர்கள் கூறினார்கள். ஆனால் திமுக அடிவருடி கட்சிகளின் முயற்சியால் சனிக்கிழமை( சனவரி 31) அன்று வைக்க வேண்டும் என்று முடிவாகிவிட்டது.

சனவரி 31 அன்று கொளத்தூரிலிருந்து ஈகி முத்துக்குமரனின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. போகும் வழியில் பெரம்பலூரிலிருந்து புரசைவாக்கம் வழியாக சென்றால் இன்னும் அதிகமாக மக்களிடம் எழுச்சி உண்டாகும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்துவார்கள் என்று மாணவர்கள் வற்புறுத்தி மறியல் செய்தனர். அப்பொழுது வாகனம் ஒன்றில் நின்றுகொண்டு வந்த தொல்.திருமாவளவனின் வழிகாட்டலில் திருமாவளவனின் உடன் இருக்கும் வன்னியரசு என்பவர் சில ஆட்களுடன் ஓடி வந்து மாணவர்களிடம் புரசைவாக்கம் வழி செல்ல இயலாது என்று கூறினார். மாணவர்களும் தங்கள் எண்ணத்தில் உறுதியாக இருந்தனர். இதனால் வெகுண்ட திருமாவளவனின் கையாட்கள் அண்ணன் திருமாவின் பேச்சை கேட்க மாட்டீர்களா என்று முதன்முறையாக இரு மாணவர்களை அடித்து மிரட்டினர். அப்பொழுதுதான் திமுக அரசின் கையாளாக மாணவர் எழுச்சியை ஒடுக்க காக்கிச்சட்டை போடாத அரசின் கையாளாக திருமாவளவன் வந்துள்ளார் என்பது மாணவர்களுக்கு தெரியவந்தது.

அந்த மாணவர்களுக்கு அமைப்போ, தலைமையோ ஏதும் கிடையாது. இதனால் தங்களால் இவர்களை எதிர்க்க இயலாது என்று பின்வாங்கிவிட்டனர். பின்னர் திமுக அரசின் எண்ணம் போல் திருமாவளவன் வழிநடத்திச்சென்றார். பின்னர் மயானத்தினை நெருங்கும் வேளையில் இரவு 9.30 மணியளவில் திமுக அரசு முத்துக்குமரனின் தியாகத்தினால் ஏற்பட்ட ஈழ ஆதரவு எழுச்சியை கண்டு பயந்து அதை ஒடுக்க அடுத்த திட்டமாக இரவோடு இரவாக கல்லூரிகளை காலவரையற்று மூட உத்தரவிட்டது.

திமுக அரசின் இவ் அறிக்கையினால் வெகுண்டெழுந்த மாணவர்கள் ஈகி முத்துக்குமரன் கூறியபடி “எமது உடலை துருப்புச்சீட்டாக வைத்து போராடுங்கள்” என்பதற்கிணங்க “திமுக அரசின் உத்தரவினை திரும்பப் பெறாவிடில் முத்துக்குமரனின் சடலத்தினை எரிக்க விடமாட்டோம்” என்று சாலையின் நடுவில் வைத்து மறுபடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அனைத்து பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து துணைநின்றனர்.

அப்பொழுது மறுபடியும் திமுக அரசின் கையாளான திருமாவளவனின் கையாள் வன்னியரசு மாணவர்களிடம் வந்து “இந்த உடலை துருப்பு சீட்டாக வைத்து போராடுவது முத்துக்குமாரை அவமானப் படுத்துவதாகும் என்று கூறியுள்ளார். அபொழுதுதான் மாணவர்களுக்கு புரிந்தது முத்துக்குமரனின் கொள்கை என்ன என்பதும் அவரது நோக்கம் என்ன என்பதும் விடுதலைச்சிறுத்தைகள் என்ற கட்சியின் முக்கிய பொறுப்பாளர் வன்னியரசுவுக்கு சுத்தமாக தெரியாது என்பது. அப்பொழுது, திருமாவளவனின் கையாட்கள் இரண்டாவது முறையாக மிகவும் மோசமாக மாணவர்களை தாக்கினர். ஊர்தியின் மேல் அமர்ந்து இருந்த செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்களை காட்டுமிராண்டித்தனமாக அடித்து கீழே தள்ளிவிட்டு ஊர்தியை கைப்பற்றி சுடுகாட்டுக்கு எடுத்து சென்றனர். அப்பொழுது வன்னியரசு மாணவர்களை திருமா அண்ணாவின் சொல்லை கேட்காத உங்களை கொல்லாமல் விடமாட்டேன் என்று கூறி உடலை எரித்துவிட்டு வந்து உங்களை கவனித்துக்கொள்கிறேன் என்று மிரட்டிவிட்டுச்சென்றார். இவைகள் எல்லாம் தொல்.திருமாவளவனின் பார்வையில்தான் நடைபெற்றது.

உண்மையான உணர்வோடு முத்துக்குமரன் தீக்குளித்ததிலிருந்து இறுதி வரை வந்த அம்மாணவர்கள் இவர்களின் செயல்பாடுகளால் தங்களின் உயிரை கையில் பிடித்துக்கொண்டு தங்கள் இரு சக்கர வண்டிகளை நிறுத்தி வைத்திருந்த கொளத்தூருக்கு வேக வேகமாக ஓடிவந்தோம்.

இதைப்பற்றிய செய்தியினை தமிழ் ஊடகங்கள் வெளியிடவில்லை. ஆனால் இந்திய எக்ஸ்பிரஸ் என்ற ஆங்கில நாளிதழ் மட்டும் வெளியிட்டிருந்தது. செய்தியினை முழுவதும் போடாமல் சிறிதளவு வெளியிட்டிருந்தது. அப்படி முழுவதும் போட்டிருந்தால் அப்பத்திரிக்கை அலுவலகத்தினை குண்டர்கள் எரித்திருப்பார்கள்.

அப்பத்திரிக்கை செய்தியும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
அப்பொழுது மட்டும் திருமாவளவன் என்ற நபரும், விடுதலைச்சிறுத்தைகள் என்ற கட்சியும் இல்லாமலிருந்தால் கண்டிப்பாக தமிழகத்தில் மாணவர் பேரெழுச்சி 1983 காலகட்டத்தில் ஏற்பட்டதைப்போல் உண்டாகியிருக்கும் திமுக அரசு கலைந்திருக்கும் அல்லது தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்களுக்கு கட்டுப்பட்டிருக்கும். ஈழமக்களின் எதிர்ப்பார்ப்பும் நிறைவேறி இருக்கும்.


ஈழமக்களைப்பற்றி வாயில் மட்டும் பேசி வரும் இப்படிப்பட்ட பச்சைத் துரோகி தொல்.திருமாவளவனை தமிழக மக்களும், தமிழீழ மக்களும் புரிந்துகொள்ள வேண்டும்..


இராவணன்

நன்றி மீனகம்

Friday, January 29, 2010

தமிழின் தொன்மையும் மறைக்கும் சூழ்ச்சியும்

''இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே பரவியிருந்தது. அசோக மாமன்னன் தமிழ் மொழியிடம் கடன் பெற்றுத்தான் அவனது கல் வெட்டுக்களைப் பொறித்திருக்கிறான். தமிழனின் தொன்மையான வரலாற்றை மறைக்க சதி நடக்கிறது’’ என்று கூறி அதிர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார்,ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி ஒருவர்.

நடன காசிநாதன்தான் அந்த அதிகாரி. நெல்லை பாளையங்கோட்டையில், மத்திய செம்மொழி தமிழாய்வு மையமும், சென்னையிலுள்ள பெரியார் ஈ.வெ.ராமசாமி-நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய ‘தமிழ்நாட்டுத் தொல்லியல் ஆய்வுகள் மற்றும் ஆதிச்சநல்லூர் சிறப்பும், எதிர்காலத்திட்டங்களும்’ என்கிற தலைப்பிலான தேசிய கருத்தரங்கில்தான் இப்படிப் பேசி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் அவர். நடன காசிநாதனை நாம் சந்தித்துப் பேசினோம்.

‘‘1989-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை தமிழ்நாடு தொல்லியல்துறை இயக்குநராக நான் பணியாற்றிய போதுதான் தமிழ்நாட்டில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடந்தன’’ என்று ஆரம்பித்தார் அவர்.

‘‘குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை ஆறு கடலோடு கலக்கும் அழகன்குளம், ஈரோடு மாவட்டம் கொடுமணல், நாகை மாவட்டம் பூம்புகார் ஆகிய இடங்களில் நிலம் மற்றும் கடல் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப் பட்டன. அழகன்குளத்தில் கொத்துக் கொத்தாய் ரோமானிய காசுகள், இடுப்பில் குழந்தையுடன் கூடிய மரத்தால் ஆனதாய் சிற்பம், கண்ணாடி கைப்பிடியை வைத்திருக்கும் மூன்று தாய்மார்களின் சிற்பம் போன்றவையும் கண்டுபிடிக்கப்பட்டன. கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த அந்தப் பொருட்கள் மூலம் பழங்காலத் தமிழன் உரோமானியர் களுடன் வணிகம் புரிந்திருக்கிறான் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.

கொடுமணலில்சாம்பிராணிப் புகை போடப் பயன்படும் செம்புப் பாத்திரம், இரும்பு ஈட்டிகள், தவிர ராஜஸ்தானிலிருந்து தருவிக்கப்பட்ட கார்னிலியன் கல்மணிகள் கண் டெடுக்கப்பட்டன. மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் சங்ககால படகுத்துறை, நீர்த்தேக்கம், புத்தவிகார் போன்றவை கிடைத்தன. தமிழக தொல்லியல்துறை சார்பில் நாங்கள் செய்த அகழ்வாராய்ச்சியில், கிழார்வெளி என்கிற இடத்தில் 2400 ஆண்டுகளுக்கு முந்தைய இன்னொரு படகுத்துறை, படகுகளைக் கட்டும் இலுப்பை மரம், எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகளைக் கண்டுபிடித்தோம்.

அதேபோல் கோவா கடல் ஆய்வு நிறுவனத்துடன் சேர்ந்து நாங்கள் நடத்திய ஆய்விலிருந்து, கடல் தற்போது 5 கி.மீ. தூரம் முன்னேறி ஊருக்குள் வந்திருப்பதைக் கண் டறிந்தோம். தவிர, ‘சைட் ஸ்கேன் சோனார்’ என்கிற நவீன தொழில்நுட்ப முறையின் மூலம் கடலுக்குள் 21 அடி ஆழத்தில் 5 கட்டடங்கள் இருப்பதையும் கண்டுபிடி த்தோம். அவை செம்புரான் கல்லினால் கட்டப்பட்ட கோயில்கள் அல்லது புத்தவிகார்களாக
இருக்கலாம்.

                            


அதுபோல பூம்புகார் அருகே வானகிரி பகுதியில் கடலுக்குள், 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு டேனிஷ் கப்பல் மூழ்கிக் கிடப்பதைக் கண்டுபிடித்தோம். அது டென்மார்க் அல்லது இங்கிலாந்திலிருந்து வந்த கப்பலாக இருக்கலாம். அதிலிருந்த ஈயக்கட்டிகள் சிலவற்றை எடுத்து கடல் அகழ் வைப்பகத்தில் வைத்தோம். நான் பதவியிலிருந்த காலத்தில்தான் இவை அனைத்தும் நடந்தன’’ என்றவர், அடுத்ததாக சப்ஜெக்டுக்கு வந்தார்.

‘‘தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணிக் கரையிலுள்ள ஆதிச்சநல்லூரை ‘தமிழகத்தின் ஹரப்பா’ என்றே சொல்லலாம். அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல்களம் அது. கடந்த 2004-2005-ம் ஆண்டில் மத்திய தொல்லியல் அகழாய்வு இயக்குநர் எஸ்.டி.சத்தியமூர்த்தி தலைமையில் அங்கே நீண்டநாட்களாக நடந்த அகழாய்வுகளில் 150 -க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அதில் ஒரு தாழி, 3000 ஆண்டுகள் பழைமையானது. அதியற்புதமான அந்தத் தாழியில் ‘அப்ளிக்யூ’ முறையில் ஒரு பெண், மான், வாழை மரம், ஆற்றில் இரண்டு முதலைகள் இருப்பது மாதிரியான உருவங்கள் வரையப்பட்டிருந்தன.


அந்தப்பானைகளின் ஓட்டில் இருந்த சில குறியீடுகள் ஹரப்பா கால உருவ எழுத்தை ஒத்திருந்தன. அது மூவாயிரம் முதல் ஐயாயிரம் ஆண்டுகள் பழைமையானது. தவிர, அங்கு கிடைத்த செம்புப் பொருட்கள் குஜராத் டைமமாபாத்தில் கிடைத்தது போன்ற ஹரப்பா காலப் பொருட்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எல்லாவற்றுக்கும்மேலாக ஒரு தாழியின் உட் பகுதியில் பழந்தமிழ் எழுத்துக்கள் இருந்தன. அதைப் பார்த்த சத்தியமூர்த்தி உடனடியாக கல்வெட்டுத்துறை இயக்குநர் எம்.டி.சம்பத்தை அழைத்து வந்து, அந்தக் கல்வெட்டை வாசிக்கச் சொன்னார். அதில் ‘கரி அரவ நாதன்’ என்று எழுதப்பட்டிருந்ததாக சம்பத் சொல்லியிருக்கிறார் ‘கதிரவன் மகன் ஆதன்’ என்று அதற்குப் பொருள். ஆதனைப் புதைத்த தாழிதான் அது. கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் போன்றோரும் அந்தத் தாழியை அபூர்வமானது, அந்தப் பழந்தமிழ் எழுத்துக்கள் ஹரப்பா கால உருவ எழுத்துக்களைப் போல இருப்பதாக கருத்துச் சொன்னார்கள். அந்தத் தகவல்கள் கடந்த 01.07.05-ம் தேதி பிரண்ட்லைன் ஆங்கில இதழில் வெளிவந்தன.

ஆனால் அதன்பிறகு அவர்களுக்கு என்ன நெருக்கடி வந்ததோ? தற்போது தாழியில் கல்வெட்டே இல்லை என்று சொல்கிறார்கள். ‘அது அபூர்வமான தாழி’ என்று சொன்ன ஐராவதம் மகாதேவன், இப்போது, ‘அது ஹரப்பா கால எழுத்தல்ல’ என்கிறார். தாழியைக் கண்டுபிடித்த சத்தியமூர்த்தியும், சம்பத்தும் கூட இப்போது அதுபற்றி வாய்திறக்க மறுக்கிறார்கள். அவர்கள் இருந்த பல மேடைகளில் நான் இதுபற்றிப் பேசியும் அவர்கள் பதில் சொன்னதில்லை. இதையெல்லாம் நான் எழுதிய ‘தமிழகம் அரப்பன் நாகரிக தாயகம்’’ என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறேன்.


‘வடநாட்டில் அசோகர் கால கல்வெட்டுக்கள் தான் முதன்மையானவை, பழைமையானவை, அதன் காலம் கி.மு. 2300 ஆண்டுகள்’ என்பதுதான் இதுவரை சொல்லப்பட்ட வரலாறு. ஆனால், ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியிலிருந்த பழந்தமிழ் எழுத்துக்கள் கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முந்தையவை. அதாவது அசோகர் கல்வெட்டை விட 200 ஆண்டுகள் பழைமையானவை.

அப்படியானால் தமிழ்மொழியில் இருந்து கடன்பெற்றுத்தான் அசோகர் அவரது கல்வெட்டுகளைப் பொறித்திருக்கிறார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இதுவரை வடக்கிலிருந்துதான் எழுத்துக்கள் வந்தன என்கிற வாதம் இதனால் தவிடுபொடியாகிறது. ‘தமிழன் அந்தக் காலத்திலேயே கற்றறிந்தவனாக இருந்திருக்கிறான். அவன் பயன் படுத்திய தமிழ் மொழியில்தான் இந்திய மக்கள் அனைவரும் எழுதியிருக்கிறார்கள்’ என்பதும் உறுதியாகிறது.

இந்த வரலாற்று உண்மைகள் வெளியே வந்து தமிழனுக்குப் பெருமை சேர்ந்து விடக்கூடாது என்பதாலேயே சிலர் வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார்கள். ஆய்வு முடிந்து ஆறு ஆண்டுகள் ஆன பின்னரும் ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை வெளியிடப்படாததற்கு இதுவே காரணம்’’ என்றார் நடனகாசிநாதன் ஆவேசத்துடன்.

உலகச்செம்மொழி மாநாடு நடைபெறவிருக்கும் இந்த நேரத்தில் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி அறிக்கையை வெளியிட வைத்தால் அது தமிழுக்கு அளப்பரிய பெருமை சேர்க்குமே!

என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?
- அ. துரைசாமி

நன்றி

தமிழ்வட்டம் மடற்குழுவில் திரு.தங்கவேலு

தமிழ் உலகம். திரு.மறைமலை


Monday, October 19, 2009

மாங்குடி மாறிய கதை!


 
சோதிமணிக்கு வயது பத்தொன்பது. அரசுப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார். விரும்பிச் சேர்ந்த வேலை இது. அவருக்கு ஒரு கனவு இருந்தது. அடிப்படையிலிருந்து எல்லாமே மாறவேண்டும். மாணவர்களின் தலையெழுத்து மாற்றி எழுதப்பட வேண்டும். ஆசிரியப் பணியில் மட்டுமே இது சாத்தியம்.


மாணவர்கள் சோர்வின்றி கல்வி கற்கவேண்டும். இதற்கு வாகான வகுப்பறைகள் வேண்டும். ஒவ்வொரு வகுப்பறையிலும் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி, சுவர்க் கடிகாரம், நாட்காட்டி, குடிதண்ணீர், முகம் பார்க்கும் கண்ணாடி, நகம் வெட்டும் நகவெட்டி, குப்பைக்கூடை, மாணவர்கள் தங்களுக்குள் கடிதப் பரிமாற்றம் செய்துகொள்ள அஞ்சல்பெட்டி, கணினி, சுகாதாரமான கழிப்பறை, விளையாட்டுப் பொருட்கள், பூங்கா... இப்படி நீண்டுக்கொண்டே போனது ஆசிரியர் சோதிமணியின் கனவு. மனது வைத்தால் இவை சாத்தியப்படக் கூடிய மிக எளிய காரியங்களே என்று நம்பினார்.


கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் கழித்து கனவை நனவாக்க இவருக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைக்கிறது. இப்போது மாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சோதிமணிதான் தலைமை ஆசிரியர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து, பேராவூரணி செல்லும் சாலையில், சரியாக ஏழாவது கிலோ மீட்டரில், மெயின்ரோட்டில் இருந்து இடதுபுறம் திரும்பி ஒன்றரை கிலோ மீட்டர் நடந்தால் மாங்குடி.எல்லா அரசுப்பள்ளிகளையும் போன்றுதான் மாங்குடி பள்ளியும் அப்போது இருந்தது. மாணவர்கள் கூட்டமாக, கத்திக்கொண்டே, ஒழுங்கில்லாமல் பள்ளிக்கு ஏனோதானோவென்று வந்து சென்றார்கள். தலைவாருவதில்லை. அழுக்கான ஒழுங்கற்ற உடை. பள்ளிக்குச் சுற்றுச்சுவர் கிடையாது. கழிப்பறை கிடையாது. சீமை ஓடு வேய்ந்த சிறிய கட்டடங்கள். மாணவர்கள் கிட்டத்தட்ட இங்கே அடைக்கப்பட்டிருந்தார்கள் என்று சொல்லுவதே பொருத்தம். மாற்ற வேண்டும். எல்லாவற்றையும் மாற்றவேண்டும். எங்கிருந்து தொடங்குவது? முதலில் எதை மாற்றுவது? எதைச் செய்யவேண்டும் என்ற தெளிவு எல்லாருக்குமே இருக்கிறது. ஆனால் எந்தப் புள்ளியிலிருந்து தொடங்குவது என்பதில்தான் எல்லோருக்குமே குழப்பம். அந்தப் புள்ளி சீக்கிரமே சோதிமணிக்குப் பிடிபட்டு விட்டது.தலைவாராமல் பள்ளிக்கு வரும் மாணவிகளைச் சரிசெய்வதில் ஆரம்பித்தார். மாணவிகளைக் குறை சொல்லி என்ன பிரயோசனம்? பெற்றோர் தினமும் தலைவாரி அனுப்பினால் ஒழுங்காக வரப்போகிறார்கள். பெற்றோர்களை அழைத்துப் பேசினார். “பாருங்க இனிமே திங்கள் ரெட்டைசடைன்னா, செவ்வாய் ஒற்றைச்சடை, புதன் மறுபடியும் இரட்டைசடை. இப்படி மாற்றி மாற்றித் தலை பின்னிதான் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பணும்!” – இதுநன்றாகவே வேலை செய்தது. மாறி, மாறி ஒற்றைச்சடை, இரட்டைச்சடை என்பதால் தினமும் தலைசீவியாக வேண்டிய கட்டாயம்.அடுத்ததாக சீருடை. அரசு அளிப்பது வருடத்திற்கு ஒன்றுதான். ஒருநாள் அணிந்து வந்ததை மறுநாள் அணியமுடியாது என்பதால், மாணவர்கள் விருப்பத்துக்கும் கலர் உடை அணிந்து வந்தார்கள். சிலரது உடை கிழிந்திருக்கும். சிலரது உடை அழுக்காக இருக்கும். மாணவர்களுக்குள்ளே இதனால் ஒவ்வொருவரின் பொருளாதார அளவுகோல் என்னவென்பது தெளிவாய்த் தெரிந்தது. வசதிகுறைந்த மாணவர்கள் தாழ்வுமனப்பான்மையில் மனம் குன்றினர்.அவ்வருட தீபாவளிக்கு முன்பாக ஒட்டுமொத்தமாக பெற்றோரை அழைத்து கூட்டம் போட்டார் சோதிமணி. “தீபாவளிக்கு எல்லோரும் பசங்களுக்கு எப்பாடு பட்டாவது துணி எடுத்துடுவீங்கன்னு தெரியும். ஆனா இந்தமுறை ஒரே ஒரு கட்டுப்பாடு. எல்லாரும் பிள்ளைகளுக்குச் சீருடை தான் எடுக்கணும். ஏற்கனவே ஒன்று இருக்கு. இன்னொன்று வந்துடிச்சின்னா பசங்க எல்லா நாளும் சீருடையிலேயே பள்ளிக்கு வரலாமில்லே?”பெற்றோர்கள் யோசித்தார்கள். இவர் வேறுமாதிரியான ஆசிரியர். நம் பிள்ளைகளுக்கு ஏதோ நல்லது செய்ய நினைக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டனர். நாம் ஏன் குறுக்கே நிற்கவேண்டும்? சோதிமணி என்ன சொன்னாலும் தலையாட்டத் தயார் ஆனார்கள். குழந்தைகள் பழுக்கக் காய்ச்சிய இரும்புக்கம்பி மாதிரி. எப்படி வளைக்கிறோமோ அப்படி வளைகிறார்கள். சோதிமணி நல்லபடியாக வளைக்க ஆரம்பித்தார்.


இதெல்லாம் ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய பழைய கதை...


இன்று, மாநில தொடக்கக் கல்வித்துறை 2007-08ஆம் ஆண்டின் சிறந்த பள்ளியாக மாங்குடிப் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டு விருது அளிக்கப்பட்டிருக்கிறது. பள்ளிச் சுகாதாரத்துக்கான யூனிசெஃப் அமைப்பின் பத்துநட்சத்திர விருதும் கூட. இன்னும் ஏராளமான அமைப்புகளின் விருதுகள் தலைமையாசிரியர் அறையை அலங்கரிக்கிறது. ‘வளாகம்’ என்று சொல்லக்கூடிய ஒரு கல்லூரி வளாகத்துக்குள் இருக்கும் எல்லா வசதிகளுமே இந்தப் பள்ளிக்கு இப்போது உண்டு. முழுமையான சுற்றுச்சுவர், சுகாதாரமான கழிப்பிடம், இருசக்கர வாகனங்கள் நிறுத்த தனியாக நிறுத்துமிடம், ஐந்தாம் வகுப்பிலிருந்து மாணவர்களுக்கு மேசை, கணினி அறை, நூலகம், அறிவியல் பரிசோதனைக் கூடம், ஒவ்வொரு வகுப்பறைக்கும் தனித்தனியாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்க்குழாய், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி... இன்னும் என்னவெல்லாமோ...


வெறும் ஐந்தே ஆண்டுகளில் இதெல்லாம் எப்படிச் சாத்தியம்?


“இதெல்லாமே அரசு கொடுக்குறதை வெச்சிதாங்க பண்ணுறோம். எல்லா பள்ளிகளுக்கும் இதே வசதிகளை அரசு கொடுக்குது. அதை ஆசிரியர்கள் நாம எப்படி எடுத்துப் பயன்படுத்தறோம்கிறது முக்கியம்!” என்கிறார் சோதிமணி. நாற்பத்து மூன்று வயதான சோதிமணியின் பெயர் இவ்வருட நல்லாசிரியர் விருதுக்காகப் பரிந்துரைக்கப் பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். முன்கூட்டிய வாழ்த்துகள் சோதிமணி ஐயா! (இது கட்டுரை எழுதும்போது இருந்த நிலை. கடந்த ஆசிரியர் தினத்தன்று சோதிமணிக்கு நல்லாசிரியர் விருது கிடைத்திருக்கிறது)

இவர் சொல்லுவதைப் போல இந்த மாற்றங்கள் எல்லோராலுமே சாத்தியப்படுத்தக் கூடியதுதான். என்ன.. சோதிமணிக்கு இருந்தது போல கொஞ்சம் கனவும், நிறைய மனசும் முதலீடாகத் தேவைப்படும்!


நேரடியாக மாங்குடியிலிருந்து.....!எட்டாம் வகுப்பு படிக்கும் பதிமூன்று வயது விஜயகாந்துக்கு தனியாக மின்னஞ்சல் இருக்கிறது. இவனுக்கு மட்டுமல்ல இங்கிருக்கும் எல்லா மாணவர்களுக்குமே மின்னஞ்சல் இருக்கிறது. கணின தண்ணி பட்ட பாடு. தலைமையாசிரியர் சோதிமணியிடம் இணைய இணைப்புக்கான டேட்டாகார்ட் இருக்கிறது. குறிப்பாக மாணவர்கள் இங்கே இணையத்தில் பார்ப்பது தமிழ் விக்கிபீடியா.

“தமிழ் விக்கிபீடியா மாணவர்களுக்கு மிகவும் பயனா இருக்குங்க. பாடப் புத்தகத்துலே நாங்க பாடம் நடத்தி முடிச்சதும் அந்தப் பாடம் சம்பந்தமா விக்கிபீடியாவில் அவங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா பார்த்து தெரிஞ்சுக்குறாங்க. ஆசிரியர்களோட வேலைப்பளு இதனால குறையுது”

எல்லா மாணவர்களுக்கும் ஈ-கலப்பை மென்பொருள் பயன்படுத்தி தமிழில் தட்டச்சத் தெரிகிறது. பவர்பாயிண்டில் வேகமாக இயங்குகிறார்கள். பேஜ்மேக்கரில் டிசைன் செய்கிறார்கள். பாடம் முடிந்ததும் பவர் பாயிண்டில் குழுவாக பாடங்களைச் செய்யவேண்டும். ஒவ்வொரு குழுவிலும் மூன்று அல்லது நான்கு மாணவர்கள் இருக்கிறார்கள். வகுப்பு ஒன்றுக்கு ஆறு, ஏழு குழுக்கள் இருக்கின்றன. வாரத்துக்கு ஒருமுறை தாங்கள் செய்த பாடங்களை மற்ற குழுவினர் மத்தியில் படைக்க வேண்டும். இதற்காக எல்.சி.டி. புரொஜெக்டர் ஒன்றும், பெரிய திரை ஒன்றும் வாங்கி வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் பொதுவாக கல்லூரிகளில் இருக்கும் நடைமுறை.

குழு வேலைகள் மட்டுமல்லாது ஒவ்வொரு மாணவனுக்கும் தனி பாடங்களும் உண்டு. முழுநீள வெள்ளைத்தாளில் ஆசிரியர் மூலமாக தான் கற்ற பாடத்தை எவ்வாறு உள்வாங்கிக் கொண்டோம் என்பதை எழுதியாக வேண்டும். ஒவ்வொரு வேலையும் தனித்தனிக் கோப்புகளில் ஆவணப்படுத்தப்படுகிறது. தேர்வு நெருங்கும் நேரத்தில் இந்த கோப்புகளை மாணவன் எடுத்துப் பார்த்து தன்னுடைய முன்னேற்றத்தைச் சுயமதிப்பீடு செய்துக் கொள்கிறான்.

நூலகம் இங்கே சிறப்பாக இயங்குகிறது. பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் போன்ற விலையுயர்ந்த நூல்களும் உண்டு. மாணவர்கள் ஓய்வுநேரத்தில் தங்களுக்கு வேண்டிய நூல்களை எடுத்துப் படித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு வகுப்பறையிலும் சிறியளவிலான நூலகம் தனியாக அமைந்திருக்கிறது.

இவற்றையெல்லாம் கையாள நிறைய பேர் தேவைப்படுகிறார்கள். ஆனால் பள்ளியில் இருக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை எட்டு மட்டுமே? எப்படிச் சமாளிக்கிறார்கள்?

“எல்லாத்தையும் பசங்களே பண்ணிடுறானுங்க சார். பள்ளியிலிருந்து எழுதப்படும் கடிதங்களில் ஆரம்பிச்சு, பள்ளியோட மாணவர்கள் வருகைப் பதிவேடுன்னு எல்லாத்தையும் மாணவர்களே கையாளுறாங்க. இங்கே படிக்கிற 241 மாணவர்களில் 200 பேர் ஏதோ ஒரு குழுவில் கட்டாயம் இருப்பாங்க. ஒவ்வொரு வேலைக்கும் ஒரு குழு.


உதாரணத்துக்கு குடிநீர் கண்காணிப்புக் குழு, சுகாதார கண்காணிப்புக் குழு, நூலகக் கண்காணிப்புக் குழுன்னு ஏராளமான குழுக்களா வேலைகளை பிரிச்சிக் கொடுத்திருக்கோம். ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்குறதாலே, அந்தப் பொறுப்புக்கான கடமைகளை, நாங்க சொல்லாம அவங்களே எடுத்துப் பண்ணிடுறாங்க. ஒண்ணு, ரெண்டு முறை தவறு வரும். சின்னக் குழந்தைகள்தானே? அதனால் அதை நாங்க பெரிசுப் படுத்திக்குறது இல்லை. ஆனா இதனால ஒவ்வொரு மாணவனுக்கும் தலைமைப் பண்பு இயல்பாகவே வந்துடுது” என்கிறார் தலைமை ஆசிரியர் சோதிமணி.


1995 ஆம் ஆண்டு இங்கிருந்து போன முன்னாள் மாணவி ஒருவர் மாற்றுச் சான்றிதழ் கேட்டு வருகிறார். ஒரு விண்ணப்பம் எழுதித்தரச் சொல்லி தலைமையாசிரியர் கேட்க, அவர் விழிக்கிறார். உடனே ஒரு மாணவனை அழைத்து, “தம்பி. இவங்களுக்கு ஒரு விண்ணப்பம் எழுதிக்கொடு” என்கிறார். வேறு எந்தக் கேள்வியும் கேட்காமல் ஒரு வெள்ளைத்தாளில் அழகாக விண்ணப்பம் எழுதிக் கொடுக்கிறான் மாணவன்.“வெள்ளைத்தாளைக் கையாளத் தெரிஞ்சுடிச்சின்னா போதும். ஒருத்தன் எதை வேணும்னாலும் சாதிக்கலாம். இங்கே இதைத்தான் நாங்க கற்றுத் தருகிறோம். நாளைக்கு இவங்க வளர்ந்து, அலுவலகங்களில் வேலை பார்க்கும்போது எந்தத் தயக்கமும் இல்லாம வேலை பார்ப்பாங்க. ஏன்னா எங்க அலுவலக வேலைகளையும் அவர்களே பகிர்ந்துக்கிட்டு அனுபவப் பட்டுடுறாங்க! விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்யுறது, தேர்வு மதிப்பெண் அட்டைகளைத் தயார் செய்யுறதுன்னு கம்ப்யூட்டர்லேயே பசங்க எல்லா வேலையையும் முடிச்சிட்டு அழகா பிரிண்ட் எடுத்துக் கொடுத்துடுவாங்க”

பள்ளிக்குள்ளேயே ஒரு போஸ்ட் ஆபிஸ் நடைபெறுவது சுவாரஸ்யமானது. ஒரு தலைமை அஞ்சல்காரர், இரண்டு அஞ்சல்காரர்கள் உண்டு. இவர்களும் மாணவர்கள்தான். இவர்கள் அஞ்சல்குழுவில் உறுப்பினர்களாக இருப்பவர்கள். நாலாம் வகுப்பு படிக்கும் மாணவன், எட்டாம் வகுப்பு படிக்கும் தன் அண்ணனுக்குக் கடிதம் எழுதி, தன் வகுப்பில் இருக்கும் தபால் பெட்டியில் போட்டுவிடலாம். அது போஸ்ட் மேன் மூலமாக சேகரிக்கப்பட்டு, தலைமை அஞ்சல்காரரால் முத்திரை இடப்பட்டு சம்பந்தப்பட்ட மாணவனுக்குப் போய்ச்சேர்ந்து விடுகிறது. ஆசிரியர்களையும் மாணவர்கள் தபால் மூலமாகவும் தொடர்பு கொள்கிறார்கள். சாக்பீஸ் தீர்ந்துவிட்டது, வாங்கவேண்டுமென்றால் கரும்பலகைகள் கண்காணிப்புக் குழு, தலைமையாசிரியருக்கு ஒரு கடிதம் மூலமாகத் தன் தேவையை அனுப்பி வைக்கிறது. இந்த உள்பரிமாற்ற முறைகள்’கடிதம் எழுதுவது’ குறித்த அச்சம் ஏதுமின்றி மாணவர்களை வளர்த்தெடுக்கும் என்கிறார்கள்.


சிறுசேமிப்புத் திட்டமும் உண்டு. மாணவர்கள் சேமித்துத் தரும் பணத்தை ‘தொடர் வைப்புமுறையில்’ முதலீடு செய்து, அவர்கள் பள்ளியை முடித்துச் செல்லும்போது மொத்தமாகத் தருகிறார்கள். இது அவர்களது மேற்கல்வித் தேவைகளுக்கு உதவுகிறது.

இந்தப் பள்ளிக்கென்றே தனிச்சின்னம் (Emblem) உருவாக்கியிருக்கிறார்கள். தினசரி காலை தேசியக்கொடியேற்றம் மற்றும் இறைவணக்கக் கூட்டம் நடக்கிறது. மாணவர்கள் சாப்பிடச் சென்றாலும் சரி, இடைவேளையில் கழிப்பறைக்குச் சென்றாலும் சரி. வரிசையாகவே செல்கிறார்கள். வரிசையாகவே வருகிறார்கள். தமிழ், ஆங்கிலம் இரண்டிலுமே இவர்களது கையெழுத்து மெச்சப்படக் கூடியதாக இருக்கிறது. இதற்குப் பின்னாலும் தலைமையாசிரியர் இருக்கிறார். பெங்களூரில் உள்ள மண்டல ஆங்கிலப் பயிற்சி நிறுவனத்தில் அவர் எடுத்துக் கொண்ட பயிற்சியின் விளைவாகவே, மாணவர்களுக்குச் சிறந்த கையெழுத்துத் திறனை அளிக்க முடிகிறது. எல்லா மாணவர்களின் கையெழுத்தும் கிட்டத்தட்ட ஒன்றுபோலவே இருக்கிறது. ஒரே மாதிரியான இடைவெளி விட்டு எழுதுகிறார்கள்.

ஓர் ஆண்டுக்கு மொத்தமாகவே மூன்றே மூன்று நோட்டுப் புத்தகங்கள் மட்டுமே மாணவர்கள் வாங்க வேண்டியிருக்கிறது. இதற்கு மேல் நோட்டுப் புத்தகங்களில் எழுதியாகவேண்டிய அவசியம் இல்லவேயில்லை என்கிறார்கள் ஆசிரியர்கள். திட்டவேலைகளை வெள்ளைப் பாண்ட் பேப்பரில் எழுதுகிறார்கள். நோட்டுப் புத்தகங்கள் மற்றும் வெள்ளைத்தாள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பேப்பர் லிட் (TNPL) நிறுவனத்தில் வாங்குகிறார்கள்.
மதிய உணவு சாப்பிட வசதியாக கடப்பா கற்களால் அமைக்கப்பட்ட மேடைகள் உண்டு. ஒரே நேரத்தில் நூறு குழந்தைகள் இங்கு வரிசையாக அமர்ந்து சாப்பிடலாம். திறந்தவெளி கலையரங்கம் உண்டு. மூலிகைச்செடிகள் வளர்க்கப்பட்ட பூங்காவில் சறுக்குமரம், ஊஞ்சல் என்று குழந்தைகள் விளையாட இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அறிவியல் கூடம், தொழிற்கூடம் எல்லாம் கூட உண்டு. சென்னையில் இயங்கும் தமிழ்நாடு அறக்கட்டளை போன்ற அமைப்புகளின் பங்கு இப்பள்ளியின் அடிப்படைக் கட்டுமானத்தில் உண்டு என்கிறார்கள்.

ஒவ்வொரு வகுப்பறையிலும் தொலைக்காட்சிப்பெட்டி இருக்கிறது. நூலக அறையில் குறுவட்டுக்களில் ஒளிபரப்பப்படும் படங்களை எல்லா வகுப்பறைகளிலும் மாணவர்கள் பார்க்க இயலுகிறது. பாடம் முடிந்துவிட்டால் மாணவர்கள் தொலைக்காட்சி பார்க்கலாம். சினிமாப் படங்களும் உண்டு. வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதி, காமராஜர் என்று தலைவர்களின் வரலாற்றுப் பட குறுவட்டுகளை நிறைய சேமித்து வைத்திருக்கிறார்கள். மதிய வேளையின் போது மாணவர்கள் சத்தம் போடுவதை நிறுத்த ஒலிபெருக்கியில் தேசபக்திப் பாடல்களை ஒலிபரப்புகிறார்கள்.

ஒரு வகுப்பில் கூட ‘பிரம்பு’ என்ற பொருளையே பார்க்கமுடியவில்லை என்பது மற்றொரு ஆச்சரியம். ஆசிரியர்கள் முகத்தில் எப்போதும் கனிவு. “நாங்க சத்தம் போடுற மாதிரி மாணவர்கள் நடந்துக்கறதே இல்லை. எல்லாமே ஒரே ஒழுங்கில் செயல்படுறாங்க. இங்கே கடைசி பெஞ்ச் மாணவன், மாணவர்களெல்லாம் இல்லவேயில்லை. ஒவ்வொரு மாசமும் அவங்க அவங்க இடத்தை மாத்துவோம். எல்லோரும் ஒரே மாதிரி நல்லாவே படிக்குறாங்க. இங்க இருந்து போன பசங்க எஸ்.எஸ்.எல்.சியில் நானூறுக்கு மேல மார்க் வாங்குறாங்கன்னு கேள்விப்படுறப்போ மகிழ்ச்சியா இருக்கு” என்கிறார்கள் ஆசிரியர்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு அறிமுகப் படுத்தியிருக்கும் செயல்வழிக் கற்றல் முறை மற்றும் படைப்பாற்றல் கல்விமுறை மவுனமான கல்விப்புரட்சியை தமிழகத்தில் ஏற்படுத்தி வருகிறது என்கிறார் தலைமையாசிரியர். இதன் பலன்கள் இன்னும் சில வருடங்களில் தெரியும். இப்போதே நம் கல்விமுறையை பார்த்து, இதே முறையை பஞ்சாப், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்கள் அமல்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மாங்குடிப் பள்ளி இந்தியாவுக்கே ஒரு மாதிரி பள்ளி. தமிழகத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளும் மாங்குடிப் பள்ளியாய் மாறிவிட்டால் கல்வி வளர்ச்சியில் உலகிலேயே முதல்மாநிலமாக தமிழகம் திகழும் என்பது உறுதி.

சாதனை ஆசிரியர் மாங்குடி சோதிமணி அவர்களுக்கு ஒரு வாழ்த்து சொல்வோமே!

+91 9443 692 360
vjothi66@rediffmail.com(நன்றி : புதிய தலைமுறை yuvakrishna@gmail.com )

Tuesday, September 29, 2009

எழுத்தேணி அறக்கட்டளை

எழுத்தேணி அறக்கட்டளை என்பது எழுத்தை(கல்வியை) ஏணியாகக் கொண்டு இந்தச் சமுதாயத்தை மனித நேயம் கொண்ட அறிவார்ந்த சமுதாயமாக மாற்றியமைக்க வேண்டும் என்னும் உயரிய நோக்கத்திற்காக 1998 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

உண்மையான கல்வியைக் கற்பிப்பது, உலகத்தின் உன்னதத் தொழிலாம் உழவுத் தொழிலை, வேளாண்மையைப் போற்றுவது, அதனை ஆதாரமாகக் கொண்டு, அதன்வழி மனிதத்தை வளர்ப்பது, மனிதத்தைப் போற்றச் செய்வது, சமூக மாற்றத்தை ஏற்படுத்துவது, போன்றவை எழுத்தேணி அறக்கட்டளையின் குறிக்கோள்களாகும்.